இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரிணி மரணமடைந்துள்ளார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தற்போது அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 47.
தற்போது இசைஞானி இளையராஜாவும் இலங்கையில் தான் இருக்கிறார். வருகின்ற சனிக்கிழமை மாலை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இலங்கையில் நடக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது பவதாரணி மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மரணம் அடைந்துள்ளார்.
கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா போலவே இசைத்துறையில் பாடகியாக 1995 முதல் பயணித்தவர். தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடித்த ராசய்யா படத்தில் பாடகியாக அறிமுகமானார். முதல் பாடலான `மஸ்தானா… மஸ்தானா…’ பெரிய அளவில் ஹிட்டும் ஆனது. தந்தை இளையராஜா மற்றும் சகோதரர்கள் கார்த்தி ராஜா, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அத்துடன், தேவா மற்றும் சிற்பி இசையிலும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.
2001 ஆம் ஆண்டு பாரதி படத்தில் இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. மித்ரு மை ப்ரெண்ட் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன பவதாரிணி, தொடர்ந்து சில படங்களுக்கு இசையமைத்தார். முகிலினமே என்ற பாடலுக்கு தனிப்பட்ட முறையில் இசையமைத்துள்ளார்.
காதலுக்கு மரியாதை படத்தில் , ‘இது சங்கீத திருநாளோ’, ப்ரண்ட்ஸ் படத்தில் ‘தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதோ’, ராமன் அப்துல்லா படத்தில் ‘என் வீட்டு ஜன்னல் தொட்டு’ சொல்ல மறந்த கதை படத்தில் ‘ஏதோ உன்ன நெனச்சிருந்தேன்’ உள்ளிட்ட மனதை கிறங்கடிக்கும் பல பாடல்களை பாடியுள்ளார்.
பவதாரிணி மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.