இலங்கையின் சுதந்திரநாளை தமிழர்தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து பெப்ரவரி (04) இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வார்ப்பாட்டமானது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜனின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி வேண்டும், தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை தேவை, தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்தல் வேண்டும், பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும், தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும், தமிழர் தாயகத்திலுள்ள வரலாற்றுத் தொல்லியல் சான்றுகளை அழிக்காதே, இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வு வேண்டும் என்னும் ஏழு விடயங்கள் இவ்வார்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டதுடன், நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரிலான மைத்திரி – ரணில் அரசாங்கம், தமிழ் தரப்புடன் இணைந்து தயாரித்த புதிய ஏக்கியராஜ்ஜிய (ஒற்றையாட்சி) அரசியலமைப்பு வரைபை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முற்றாக நிராகரிப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலை,காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் இன அழிப்பிற்கான நீதி, நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்படுதல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.