28.6 C
Jaffna
November 10, 2024
Uncategorized

தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்ற மக்கள் எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் மருதங்கேணி கிராம மக்கள் இன்று காலை 9:30மணிமுதல்  போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.


வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள மருதங்கேணி கிராம சேவகர் பிரிவு உள்ளது. இக் கிராம சேவகர் பிரிவில் மருதங்கேணி வடக்கு, மருதங்கேணி தெற்கு, தாளையடி என்கின்ற மூன்று கிராமங்கள் உள்ளன.

இதில் தாளையடி என்கின்ற சுமார் 140 குடும்பங்களைக் கொண்ட கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி இரகசியமாக மேற்கொண்டு வருகின்றார்.

இதனை அறிந்த மருதங்கேணி வடக்கு, மருதங்கேணி தெற்கு கிராம மக்கள் தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதை உடனடியாக கைவிடுமாறு கோரியே குறித்த போராட்டம் நடாத்தப்பட்டது. 

இதில் மருதங்கேணி எங்கள் சொத்து இதனை ஒருநாளும் பிரிக்க இடமளிக்க மாட்டோம்,  தாளையடியில் கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டத்திற்காக எமது பாரம்பரிய நிலங்களை அபகரிக்காதே,  உங்கள் டீலுக்காக தாளையடி கிராமத்தை பிரிக்காதே,  மருதங்கேணி எங்கள் பூர்வீக சொத்து, உங்கள் நலனுக்கு எங்கள் பிரதேசம் லஞ்சமா, எல்லை நிர்ணயம் செய்த போது அயல் கிராமங்களை அழைக்காதது ஏன், இவ்வாறு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அங்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக ஆக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தாளையடி கிராமம் தனியான கிராமசேவகர் பிரிவாக ஆக்கப்படும்போது எல்லைகள் நிர்ணயம் செய்யும் போது தங்களையும் அழைத்துத் தான் எல்லை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவித்தார். 

அவ்வாறு கருத்து தெரிவிக்கும் போது குறுக்கிட்ட போராட்டக் காரர்கள் நீங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள், அப்படியாயின் எவ்வாறு இந்த கடிதம் அனுப்பப்பட்டது என்று  பிரதேச செயலாளர் கு.பிரபாக மூர்த்தியால் மாவட்ட செயலருக்கு முகவரியிடப்பட்ட, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கு பிரதியிடப்பட்ட கடிதம் ஒன்றினை வாசித்து காட்டினர்.

அதில் நாற்றிசையும் எல்லை இடப்பட்டு தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை எடுங்கள் என எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதேச செயலாளர் பதில் எதுவும் கூற முடியாது அங்கிருந்து விலகிச் சென்றார்.

இதே வேளை அங்கு போராட்டக்காரர்கள் தாளையடி கிராமத்தை  அவர்கள் இருக்கின்ற அமைவிடத்துடன் கிராம சேவகர் பிரிவாக மாற்ற தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும், பிரதேச செயலாளரால் மாவட்ட செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் அதில் உள்ள எல்லைகளுடன் தாளையடி கிராம சேவகர் பிரிவை உருவாக்கவும், தமது பாரம்பரியமான கிராமத்தை இல்லாதொழிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.




Related posts

தபால்மூல வாக்களிப்பு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

User1

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு !

User1

சமூக ஊடகங்களில் அவதூறு – முதல் நபர் கைது.!

sumi

Leave a Comment