28 C
Jaffna
September 20, 2024
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள் தேவை

லண்டன் கெனிங்டன் கியா ஓவல் விளையாட்டரங்கில் 26 வருடங்களின் பின்னர் மீண்டும் வெற்றிபெறும் முனைப்புடன் 219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, 3ஆம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் நிறுத்தப்பட்டபோது ஒரு விக்கெட்டை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கையின் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதம் இருக்க அதன் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

போட்டியில் மேலும் 2 நாட்கள் மீதம் இருப்பதால் இலங்கை அணி அவசரப்படாமல் ஆறஅமர துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்.

திமுத் கருணாரட்ன (8) துரதிர்ஷ்டவமாக கிறிஸ் வோக்ஸின் பந்து வீச்சில் பட் – பேட் (bat – pad) மூலம் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

முதல் இன்னிங்ஸில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்த பெத்தும் நிஸ்ஸன்க இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைச் சதம் குவித்து 53 ஓட்டங்களுடன் ஆட்டம்  இழக்காதுள்ளார். 44 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டறிகளை அடித்துள்ளார். மறுபக்கத்தில் குசல் மெண்டிஸ் 6 பவுண்டறிகள் உட்பட 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இன்று காலை விக்கெட் காப்பில் ஈடுபட்டிருந்த தினேஷ் சந்திமால், 18ஆவது ஓவரில் லஹிரு குமார வீசிய பந்து இடப்புறமாக எகிறிச்சென்றபோது உயரே தாவி தார். ஆனால் பந்தைப் பிடித்த பின்னர்  நிலத்தில் வீழ்ந்து அடிபட்டதால் தினேஷ் சந்திமால் கடும் வலியால் அவதியுற்றார்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு பதில் வீரர்கள் அவரை தாங்கலாக மைதானத்தை விட்டு அழைத்துச் சென்றனர். வீரர்கள் தங்குமறைக்கு அவர் ஒவ்வொரு படியாக தட்டுத்தடுமாறி ஏறிச்சென்றார். 18ஆவது ஓவரிலிருந்து அவருக்குப் பதிலாக நிஷான் மதுஷ்க விக்கெட் காப்பாளராக செயற்பட்டார்.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை எஞ்சிய 5 விக்கெட்களை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 265 ஓட்டங்களாக இருந்தது.

தனஞ்சய டி சில்வா 64 ஓட்டங்களிலிருந்தும் கமிந்து மெண்டிஸ் 54 ஓட்டங்களிலிருந்தும் தங்களது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்தனர்.

அவர்கள் இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை பலமான நிலையில் இடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கையின் கடைசி 5 விக்கெட்கள் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

மொத்த எண்ணிக்கை 220 ஓட்டங்களாக இருந்தபோது தனஞ்சய டி சில்வா 69 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் 64 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

பின்வரிசையில் அசித்த பெரனாண்டோ (11) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்;

பந்துவீச்சில் ஒல்லி ஸ்டோன் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொஷ் ஹல் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றத்திற்கு மத்தியில் சகல விக்கெட்களையும் இழந்து 156  ஓட்டங்களைப்  பெற்றது.

இந்தத் தொடரில் இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் சரிவு கண்டது இதுவே முதல் தடவையாகும்.

டான் லொரன்ஸ் 35 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 67 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து 7 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

அப்போது ஜெமி ஸ்மித் 31 பந்துகளில் 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அடுத்த 6 பந்துகளில் 20 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன் 43 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

இறுதியில் 50 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 67 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவர் கடைசி 19 பந்துகளில் 52 ஓட்டங்களைக் குவித்தமை இங்கிலாந்துக்கு சற்று தெம்பைக் கொடுப்பதாக அமைந்தது.

லோரன்ஸ், ஸ்மித் ஆகியோரைவிட ஜோ ரூட் (12), ஒல்லி ஸ்டோன் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் லஹிரு குமார 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 43 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ஓட்டங்களையும் இலங்கை 263 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

Related posts

இலங்கை அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடியது..ரோஹித் சர்மா பேட்டி..

User1

முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கபடி சுற்றுப்போட்டி.!

sumi

பங்களாதேஷ் – இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்: பிரதான பந்துவீச்சாளர்கள் விலகல்

User1

Leave a Comment