பட்டிருப்புக் கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுத்தறிவு தின நிகழ்வு இன்று மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் முறைசாராக் கல்விப் பிரிவு இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வன் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பட்டிருப்புக் கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பு.திவிதரன், முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தட்சணாமூர்த்தி, பாடசாலை அதிபர்களான ஏ.மனோகரன், எஸ்.சேகர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வானது சர்வதேச எழுத்தறிவு தினம், எழுத்தறிவின் முக்கியத்துவம், கட்டாயக் கல்வி, அனைவருக்கும் கல்வியில் சரிநிகர், இடைவிலகலைத் தவிர்த்தல் போன்ற கருப்பொருட்கள் கொண்டதான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துமுகமாக விழிப்புணர்வு ஊர்வலம், விசேட கருத்துரைகள், கலந்துரையாடல்கள் என்பன நடைபெற்றன.
இதில் மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயம், மட்/பட்/மகிழூரமுனை சக்தி வித்தியாலயம், மட்/பட்/கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.