29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப் பணிகள்: நாட்டுக்கு வருகை தரவுள்ள சிஷேல்ஸ் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான குழு

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதித்தேர்தலைக் கண்காணிப்பதற்காக சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைமையிலான 13 பேர் அடங்கிய பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழு எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக வழமைபோன்று இம்முறையும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுத்துள்ளது. அதற்கமைய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் இரண்டு குழுக்கள் கடந்த இரு வாரங்களில் நாட்டை வந்தடைந்ததுடன், அவை நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பித்துள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழுவொன்றும் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் செயன்முறையைக் கண்காணிப்பதற்காக நாட்டுக்கு வருகைதரவுள்ளது. பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைமையில் 13 உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை இத்தேர்தல் கண்காணிப்புப்பணிகளுக்காக நியமித்துள்ளார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட், ‘தேர்தல் கண்காணிப்புப்பணி என்பது பொதுநலவாய அமைப்பின் மிகமுக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதனூடாக உறுப்புநாடுகளின் முக்கிய கட்டமைப்புக்கள் மற்றும் செயற்பாடுகளின் ஜனநாயகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது.

அதற்கமைய இலங்கையில் தேர்தலுக்கு முன்னரான சூழ்நிலை, வாக்களிப்பு செயன்முறை, வாக்கு எண்ணல் செயன்முறை, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னரான சூழ்நிலை என்பன உள்ளடங்கலாக தேர்தல் செயன்முறையின் நம்பகத்தன்மையில் தாக்கம் செலுத்தக்கூடிய சகல காரணிகளும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழுவினால் செயற்திறன் மிக்கவகையில் மதிப்பீடு செய்யப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிவரும் 15 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ள பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழு, இம்மாதம் 27 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து தேர்தலுக்கு முன்னர், தேர்தல் தினத்தன்று மற்றும் தேர்தலுக்குப் பின்னர் என முழுமையான கண்காணிப்புப்பணிகளை முன்னெடுக்கவுள்ளது.

இதன்போது கண்டறியப்படும் விடயங்களை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையொன்று முதலில் வெளியிடப்படவிருப்பதுடன், அதனைத்தொடர்ந்து எதிர்காலத் தேர்தல் செயன்முறையை மேம்படுத்துவதற்கு உதவக்கூடியவாறான விரிவான அறிக்கையொன்று வெளியிடப்படும்.

அதன்படி சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைமையிலான இக்கண்காணிப்புக்குழுவில் அன்டிகுவா மற்றும் பர்புடா, பஹமாஸ், பிஜி, ஜமைக்கா, கென்யா, மாலைதீவு, நியூஸிலாந்து, நைஜீரியா, பாகிஸ்தான், சென் லூஸியா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் ஆணைக்குழுக்களின் அதிகாரிகளாகப் பணியாற்றுகின்ற மற்றும் இராஜதந்திரப் பதவிகளை வகிக்கின்ற லான் ஹக்ஸ், அலிஸன் மேனார்ட் ஜிப்ஸன், ஜொஸபின் தமாய், ஷரோன் பக்வான்-ரோல்ஸ், ட்ரெஸ்-ஆன் க்ரெமர், மனோவா எஸிபிஸு, சாரா நஸீம், மேரியன் ஸ்ரீட், அடெரெமி அஜிபெவா, மொஹமட் அமீர் வஸிம், சிந்தியா பாரோ, மண்ட்லா சுனு மற்றும் விக்டர் சாலே ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

Related posts

வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரம் செய்ய தடை !

User1

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

User1

திருமலை கடற் கரையில் சிவப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

User1

Leave a Comment